Saturday, 15 February 2014

காரியவாதி

காரியவாதி

வழிபட்டால்தான் அருள்புரிவாயா?
அப்படியென்றால்
இறைவா
நீகூட
மனிதமனம் படைத்த
ஒரு
காரியவாதிதான்.

Friday, 14 February 2014

ஞானம்

இரண்டு
கைகளாலும் வணங்கினேன்
யாரும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை

ஒரு
கையை மட்டும் ஓங்கினேன்
உற்றுநோக்காதார்
யாருமில்லை

உறவு

மண்மாதா ஸ்பரிசம்
பாதங்களுக்குப் பரவசம்
இடையில்
அஃதென்ன தடுப்புச் சுவர்கள்?
காலணிகளைக் களைவோமா?

Thursday, 13 February 2014

தற்காப்பு?

பந்தாக எழுந்தால்
பாராட்டுகிறீர்கள்

புதைந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள்

விதையாக வேர்பிடித்து
விருட்சமாக வளர நினைத்தால் மட்டும்
வெட்டிவிட எண்ணுகிறீர்களே ஏன்?

சில
விதைகளுக்கு
யுகங்கள்
நாட்கள் என்பதாலா?

முதியோர் கல்வி

கண்கள் இரண்டும் இருந்தபோது
இமைகளைத் துறப்பதுகூட
எரிச்சலாய் இருந்தது.

கண்கள் புண்களான பின்னர்
உணர்வுகளாலேயே 
உலகத்தைத் தரிசித்து விட வேண்டும்
என்ற உந்துதல்

கடந்தகாலம் என்ற 
கருங்கல்லைச் சுமந்தபடி
எதிர்கால வானத்தில்
ஏற முயற்சித்தால்
படியெல்லாம்
பாசி.