Saturday, 15 February 2014

காரியவாதி

காரியவாதி

வழிபட்டால்தான் அருள்புரிவாயா?
அப்படியென்றால்
இறைவா
நீகூட
மனிதமனம் படைத்த
ஒரு
காரியவாதிதான்.

Friday, 14 February 2014

ஞானம்

இரண்டு
கைகளாலும் வணங்கினேன்
யாரும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை

ஒரு
கையை மட்டும் ஓங்கினேன்
உற்றுநோக்காதார்
யாருமில்லை

உறவு

மண்மாதா ஸ்பரிசம்
பாதங்களுக்குப் பரவசம்
இடையில்
அஃதென்ன தடுப்புச் சுவர்கள்?
காலணிகளைக் களைவோமா?

Thursday, 13 February 2014

தற்காப்பு?

பந்தாக எழுந்தால்
பாராட்டுகிறீர்கள்

புதைந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள்

விதையாக வேர்பிடித்து
விருட்சமாக வளர நினைத்தால் மட்டும்
வெட்டிவிட எண்ணுகிறீர்களே ஏன்?

சில
விதைகளுக்கு
யுகங்கள்
நாட்கள் என்பதாலா?

முதியோர் கல்வி

கண்கள் இரண்டும் இருந்தபோது
இமைகளைத் துறப்பதுகூட
எரிச்சலாய் இருந்தது.

கண்கள் புண்களான பின்னர்
உணர்வுகளாலேயே 
உலகத்தைத் தரிசித்து விட வேண்டும்
என்ற உந்துதல்

கடந்தகாலம் என்ற 
கருங்கல்லைச் சுமந்தபடி
எதிர்கால வானத்தில்
ஏற முயற்சித்தால்
படியெல்லாம்
பாசி.

Thursday, 30 January 2014

தொண்டர்கள்

நாங்கள் வசிப்பது
நடைபாதையென்றாலும்
தலைவர்களின்
இதய சிம்மாசனத்திலே
தனியிடம்
பெற்ற பெருமை எங்களுக்கு.

'வாழ்க'வும் 'வீழ்க'வும்
எங்கள்
வாழ்க்கையின்
தாரக மந்திரங்கள்.

தலைவர்களின்
முடிகளைக் காப்பாற்றத்
தலைகளையே காணிக்கையாக்கி
விமோசனம்
பெறத்துடிப்பவர்கள்.

இன்றைய தண்ணீர்க் கஷ்டத்தில்
பத்திரமாகப்
பிடித்து வைக்கலாம் என்றால்
இந்தக்
கண்ணீரும் உப்புக் கரிக்கிறதே.

எங்களுக்கு இப்போது
பிரச்சினையின்றிக் கிடைப்பது
பிராணவாயு மட்டும்தான்.

அதையும் பைகளிலே அடைத்துப்
'பிளாக்'கிலே விற்கத்
திட்டம் ஒன்று தீட்டப்படலாம்
உலக வங்கியின் நிதி உதவியோடு.

இரண்டு தலைவர்களுக்கிடையே
கருத்து வேறுபாடு -
ஊழலை அரசியல் சாசனத்தின்
அங்கமாக்குவதா
அஸ்திவாரமாக்குவதா என்று.

அதற்கு ஆதரவு தெரிவித்துத்
தீக்குளிக்க ஆசைதான்.

அதற்காகப் பெட்ரோலை விரயம் செய்தால்
தலைவர்
பவனிவரும் நேரத்தில் தொடரும்
வாகனங்களின் எண்ணிக்கை
வற்றிவிடும் என்பதால்
எங்கள் ஆசைகளைத் தள்ளிப் போட்டிருக்கிறோம்.

பாரதத் தாயே
முடிந்தால் பதிலிறு.

நாற்பத்து ஏழிலே
கருத்தரித்த சுதந்திரத்தை
என்று நீ
பிரசவிக்கப் போகிறாய்?

Wednesday, 29 January 2014

கவனம் தேவை

அரசியல் தலைகளே
அதிகார வர்க்கமே
காக்கைகள் கரையட்டும்
நீங்கள் கரையாதீர்கள்
கரைந்தால்
அது
காக்கைகளையே
தேசியப் பறவையாக்கும்
திட்டத்தில்
கொண்டுவிடும்.